முதல்வர், அமைச்சர்கள் வீடுகளை சூறையாடிய போராட்டக்காரர்கள்..!! பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு..!! ஊரடங்கு, இணைய சேவை துண்டிப்பு..!!
மணிப்பூர் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த நவம்பர் 11ஆம் தேதி முதல் காணமல் போனதாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், காணாமல் போன ஆறு பேரில் 3 பேரின் (1 பெண் மற்றும் 2 குழந்தைகள்) உடல் நவ.15ஆம் தேதி இரவு அசாம்-மணிப்பூர் எல்லைக்கு அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
மீதமுள்ள 3 பேர் (2 பெண்கள், 1 குழந்தை) மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தின் பராக் நதி கரையில் சடலமாக நவம்பர் 16ஆம் தேதி மீட்கப்பட்டனர். 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அசாமில் உள்ள சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (SMCH) அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் மணிப்பூர், இம்பால் தலைநகரில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
இச்சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கப்படவில்லை என கூறி போராட்டக்காரர்கள் இம்பாலின் ஹீங்காங்கில் உள்ள முதலமைச்சர் பிரேன் சிங்கின் இல்லத்தை முற்றுகையிட்டு தீ வைக்க முயன்றனர். ஆனால், பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை கலைத்து அனுப்பினர். இதையடுத்து, இம்பாலின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றதால் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போராட்டகரர்களை கலைக்க முயன்றனர்.
அப்போது முதலமைச்சரின் மருமகன் உள்பட 6 எம்.எல்.ஏக்கள் வீட்டில் தாக்குதல் நடத்திய போராட்டகாரர்கள், அமைச்சர்கள், 3 பாஜக எம்.எல்.ஏக்கள் வீட்டை சூறையாடினர். அதில் முதலமைச்சரின் மருமகன் ஆர்.கே. இமோ சிங்கின் கார் உள்பட சொத்துகளுக்கு தீ வைத்துக் கொளுத்தினர். இந்த கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.