Tomato Price: இல்லத்தரசிகளுக்கு ஷாக்... உச்சத்திற்கு சென்ற தக்காளி விலை...!
விளைச்சல் குறைவால் தக்காளி ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளியில் நோய் தாக்கம் மற்றும் வரத்து குறைவால், தக்காளியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. கடந்த 2 மாதங்களாக தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையானது. தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக போதிய தண்ணீர் இல்லாததால் தக்காளி மகசூல் குறையதொடங்கி உள்ளது.
இதனால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் கடந்த சில தினங்களாக தக்காளி விலை படிப்படியாக உயரத்தொடங்கி உள்ளது. கடந்த வாரம் முதல் மார்க்கெட்டில் ரூ.30 க்கும் விற்பனையானது. தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையாக பாலக்கோடு சந்தை செயல்பட்டு வருகிறது. சந்தைக்கு நாள்தோறும் 100 டன் தக்காளி வந்த நிலையில், தற்போது வெறும் 3 டன்னாக குறைந்துள்ளது. சந்தை மற்றும் கடைகளில் தக்காளி கிலோ 10, 20 ரூபாய் என விற்பனையான நிலையில் தற்போது ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இல்லத்தரசிகள் அச்சமடைந்துள்ளனர். தக்காளி விலை கட்டுப்படுத்துவது குறித்து அரசை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.