தென் இந்தியர்கள் நிறம் குறித்த சர்ச்சை பேச்சு.. வலுத்த எதிர்ப்பு.. 'ராஜினாமா செய்த சர்ச்சை நாயகன்!'
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலக முடிவு செய்துள்ளதாகவும், அந்த முடிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஏற்றுக் கொண்டதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்து உள்ளார்.
ராஜீவ் பிரதமராக இருந்தபோது ராஜீவ் காந்தியின் ஆலோசகராக சாம் பிட்ரோடா, இருந்தார். 2004 தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, சாம் பிட்ரோடாவை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய தேசிய அறிவு ஆணையத்தின் தலைவராக நியமித்தார். 2009 ஆம் ஆண்டில், பொது தகவல் உள்கட்டமைப்பு தொடர்பான மன்மோகன் சிங்கின் ஆலோசகராகவும் பிட்ரோடா இருந்தார். தற்போது இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் தொழிலதிபர் சாம் பிட்ரோடா, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், உலகின் ஜனநாயகத்துக்கு இந்தியா ஓர் சிறந்த உதாரணம் என்றும் நாட்டின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களை போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ள மக்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இப்படி பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை நம்மால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்று அவர் கூறினார்.
அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவிய நிலையில், நாட்டில் நிறவெறியை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் மோடி, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பஸ்வ சர்மா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிராஸ் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சாம் பிட்ரோடா தெரிவித்து உள்ளார். அயலக காங்கிரஸ் பிரிவின் தலைவர் பொறுப்பை விட்டு விலகுவது குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், சாம் பிட்ரோடாவின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "சாம் பிட்ரோடா இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலக முடிவு செய்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் தலைவர் ஏற்றுக் கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.