மகிழ்ச்சி...! கொப்பரை தேங்காய் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,100 ஆக உயர்வு...! மத்திய அரசு ஒப்புதல்...!
வரும் 2025 ஆம் ஆண்டு பயிர் பருவத்தில், அரவைக் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,582 ஆகவும், பந்து கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டு பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதாயமான விலை கிடைக்கச் செய்வதற்காக, 2018-19-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அனைத்து கட்டாய பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அகில இந்திய மதிப்பில் சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, 2025-ம் ஆண்டு பருவத்திற்கு கொப்பரையின் நியாயமான சராசரி தரத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.11,582/-ஆகவும், பந்து கொப்பரைக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12,100/-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த உயர்த்தப்பட்ட ஆதரவு விலை தென்னை விவசாயிகளுக்கு சிறந்த லாபகரமான வருமானத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தேங்காய் பொருட்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய கொப்பரை உற்பத்தியை விரிவுபடுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும்.
இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு லிமிடெட், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை, உரிக்காத தேங்காயைக் கொள்முதல் செய்வதற்கான மத்திய ஒருங்கிணைப்பு முகமைகளாக தொடர்ந்து செயல்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.