வள்ளியை முருகன் காதலித்து கரம் பிடித்த இடம்.. வள்ளிமலை முருகன் கோயிலின் வரலாறும் பின்னணியும்..!!
வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வேலூர் மாவட்டத்திலிருந்து காட்பாடி வழியே பெண்ணைக்கு போகும் வழியில் 25கிலோமீட்டர் தொலைவில், அமைந்துள்ளது. இந்த திருத்தலம் உருவாவதற்கு காரணமாக கூறப்படுவது என்னவெனில். ஒருசமயம் திருமால், முனிவர் வேடத்தில் பூலோகத்திலுள்ள ஒரு வனத்தில் தவமிருந்தார். அப்போது மகாலட்சுமி மான் வடிவில் அவர் முன்பு வரவே, முனிவர் மானை பார்த்தார். இதனால் கருவுற்ற மான், வள்ளிக் கொடிகளின் மத்தியில் ஒரு பெண் குழந்தையை ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவ தலைவன் நம்பிராஜன் குழந்தையை எடுத்து, வள்ளி என பெயரிட்டு வளர்த்தான்.
கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார் என கூறப்படுகிறது.
மலைக்கோயிலில் சுப்பிரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.
மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை சூரியன் காணாத சுனை என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கணைகள் விழுந்ததே இல்லையாம். இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாகவும், தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், அதற்காக வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கோவிலில் மாசியில்-பிரம்மோற்ஸவம், வைகாசி-விசாகம், ஆடிதெப்பத்திருவிழா, திருக்கார்த்திகை, தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும்.
சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி ஆற்காடு செல்லும் பேருந்துகள் பல வள்ளிமலையில் நின்று செல்லும். எனவே இறைத்தன்மை வாய்ந்த இத்தலத்திற்கு சென்று வள்ளி மலையின் அற்புதத்தை கண்டு வாருங்கள். வள்ளி, தெய்வயானை சமேதராய் வீற்றிருக்கும் முருகனின் அருளைப் பெற்று வாருங்கள்.
Read more ; TASMAC | இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை..!! – ஆட்சியர் உத்தரவு