புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் வரும் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்...! மத்திய அமைச்சர் தகவல்...!
புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் திட்டமிட்டபடி வரும் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிடும் என மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.
மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை, நேற்று சென்னையின் வேலூர் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் 'குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற கருப்பொருளில் ஒரு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. மாநாட்டின் நோக்கங்களை எடுத்துரைத்த மத்திய சட்டம் மற்றும் நீதித் துறைச் செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்துக் கூறினார். பழங்கால காலனித்துவ குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், நமது சட்ட அமைப்பு காலனிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாக கூறினார். தற்போது நாட்டின் சரியான சட்ட முறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார். பிரிட்டிஷாரின் குற்றவியல் நீதி பரிணாம வளர்ச்சியின் வரலாற்றுப் பின்னணியை அவர் விவரித்தார். காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்கள் இந்தியாவின் நெறிமுறைகள் மற்றும் சமூக யதார்த்தங்களை புறக்கணித்தன. அந்தச் சட்டங்கள் காலனித்துவ ஆட்சியாளர்களின் தேவைகளை முன்னெடுத்துச் செல்வதை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் கூறினார்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நான்கு ஆண்டு ஆய்வுகள், விரிவான ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளன. காலனித்துவ பாரம்பரியத்தின் அனைத்து தடயங்களும் அகற்றப்பட்டு, நவீன குற்றவியல் நீதி அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். அடுத்த 5 ஆண்டுகளுக்குள், இந்த மூன்று சட்டங்களும் நவீன குற்றவியல் நீதி அமைப்பை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும். புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் திட்டமிட்டபடி வரும் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிடும் என்றார்.