தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்...! இன்று தேசிய மகளிர் ஆணையம் விசாரணை..!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேசிய மகளிர் ஆணைய குழு இன்று விசாரணையை தொடங்க உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம் இதை விசாரித்து, தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சராமரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், காவல் துறையின் தவறால் எஃப்ஐஆர் வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை தமிழக அரசு வழங்க உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக் ஷித் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு இன்று விசாரணையை தொடங்க உள்ளது.