சிக்கல்..! அமைச்சர் செ.பா ஜாமீனை மறு பரிசீலனை செய்ய விண்ணப்பம்...! உச்ச நீதிமன்றம் அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை மறு பரிசீலனை செய்வதற்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 471 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்துள்ளார். அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள், வெள்ளி ஆகிய 2 நாட்களும் அவர் கையெழுத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
அதன்படி, ஜாமீனில் கடந்த 26-ம் தேதி வெளியே வந்த செந்தில் பாலாஜி, மறுநாள் வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறைஅலுவலகத்தில் கையெழுத்திட்டார். 29-ம் தேதி அமைச்சராக பொறுப்பேற்ற அவர், அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக கையெழுத்திட்டார்.
அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி நேற்று ஆஜரானார். அரசு தரப்பு சாட்சியான கணினி தடயவியல் துறை உதவி இயக்குநர் மணிவண்ணன், உடல்நிலை காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு வாரன்ட் பிறப்பித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், விசாரணையை 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்குமாறு செந்தில் பாலாஜி கோரிய மனு மீது அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை ஓராண்டுக்குள் முடிக்க உத்தரவிடக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் முக்கிய வாதம் ஒன்றை முன்வைத்தார். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை எனவே சாட்சியை கலைக்கமாட்டார் என்று தான் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராகிவிட்டார். எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரினார். ஜாமீனை மறு பரிசீலனை செய்வதற்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.