அடடே.!2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய நபர்.! யார் இவர்.? செய்தது என்ன.?
இந்த உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களும் கொடிய செயல்களும் நடந்து கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு மூலையில் மனித நேயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் உலகம் சம நிலையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நபரின் ரத்ததானம் இதுவரை 24 லட்சம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.? ஆம் அதுதான் உண்மை. ஆஸ்திரேலியாவை சார்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் என்பவர் தான் இந்த 24 லட்சம் உயிர்களையும் காப்பாற்றிய நபர். அவர் அளித்த ரத்த தானத்தின் மூலம் இத்தனை குழந்தைகளும் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.
இதுவரை 1100 முறைகளுக்கு மேல் ஆஸ்திரேலியா செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இவர் ரத்ததானம் செய்திருக்கிறார். இவரது ரத்தத்தில் ரீசஸ் நோய் என்கிற அரிய வகை நோய்க்கான ஆன்ட்டி பாடிகள் இருக்கிறது. இவரது ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆன்ட்டி பாடிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊசிகளின் மூலம் 24 லட்சத்திற்கும் அதிகமான தாய்மார்கள் மற்றும் சிசுக்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. ரீசஸ் நோய் என்பது நெகட்டிவ் ரத்த வகை கொண்ட ஒரு பெண்மணி பாசிட்டிவ் ரத்த வகையைக் கொண்ட ஒரு குழந்தையை சுமக்கும் போது தாயின் உடம்பில் இருக்கும் ஆன்ட்டி பாடிகள் குழந்தையின் நோய் எதிர்ப்பு ஆற்றல் போன்றவற்றை தாக்கி மூளை பாதிப்பு மற்றும் மரணம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
இந்த நோய்க்கு எதிரான ஆண்டிபாடிகள் ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆண்டிபாடிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றி இருக்கிறது. இவரது ரத்தத்தில் இருக்கும் ஆன்டிபாடிகளைக் கொண்டு ஆன்ட்டி-டி என்ற ரீசஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டது. இவற்றை தாய்மார்களுக்கு செலுத்துவதன் மூலம் ரீசஸ் நோயால் குழந்தைகள் இறப்பது தடுக்கப்படுகிறது. ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்ததானம் மற்றும் தன்னலமற்ற சேவை மருத்துவ உலகிற்கு தனித்துவமான ஒன்றாக அமைந்திருக்கிறது.