இளைஞர்களே இந்த பாதிப்பு வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்க..!! எவ்வளவு நல்லது தெரியுமா..?
இன்றைய இளம் தலைமுறைகளிடையே நடக்கும் பழக்கம் குறைந்துள்ளது. வீட்டின் அருகில் இருக்கும் கடைக்கு கூட இரு சக்கர வாகனங்களில் தான் செல்கின்றனர். வளர் பருவத்திலேயே நடக்காவிட்டால், 30 வயதுக்கு மேல் நீரிழிவு, இதய பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிப்புகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
பல நேரங்கள் மொபைல் ஃபோன்களில் மூழ்கிக் கிடக்கும் இளம் தலைமுறையினர், நடக்க நேரமில்லை என்று கூறுகின்றனர். கிடைக்கும் நேரத்தில் நடைபயணம் மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியம் அடையும் என்பதை இளம் தலைமுறையினர் உணர வேண்டிய கட்டாயம் இது. இந்நிலையில், காலை, மாலை நடைபயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காலை நேர நடைபயிற்சி...
காலை நடை பயிற்சி மேற்கொள்வதால், அன்று முழுவதும் நாம் சுறுசுறுப்பாக உணர முடியும். இதயத்துடிப்பை உயர்த்தி வளர்ச்சிதை மாற்றத்தை தொடங்கும். உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள கலோரிகளை குறைக்க காலை நடைபயிற்சி உதவுகிறது. மேலும், இரவு நிம்மதியான தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது. காலை நேரத்தில் நடக்கும் பழக்கத்தால் நமது உடலுக்கு தேவையான சூரிய ஒளி, புதிய காற்று போன்றவை இயற்கையாக நம் மனதையும், உடலையும் உற்சாகப்படுத்துகிறது. சுறுசுறுப்பாக இருப்பதற்கும், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் காலை நடைபயிற்சி உதவுகிறது.
மாலை நேர நடைபயிற்சி...
நாள் முழுவதும் நாம் வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி அந்த நாளுக்கான மன அழுத்தத்தை குறைக்கிறது. தீவிரமான அல்லது நீண்ட நேர நடைபயிற்சியால் உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். மாலை நேர நடைபயிற்சி செரிமானத்திற்கு உதவுகிறது நிதானமாக நடப்பது உடல் உணவை செரிமானம் அடையச் செய்ய உதவுகிறது. காலை நடைபயிற்சி மேற்கொள்ள சிரமம் உள்ளவர்கள் மாலை நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்
இளம் தலைமுறையினர் இடையே குறைந்து வரும் நடக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், விறு விறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள் குறித்த செயல் திட்டத்தை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது. உலக அளவில் இதய பாதிப்பு, பக்கவாதம், புற்றுநோய், நாள்பட்ட சுவாச பிரச்சனை உள்ளிட்ட நோய்களால் ஆண்டுக்கு 4.01 கோடி பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
விறு விறு நடையால் 20 நன்மைகள்
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும், அதில் 70,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2030ஆம் ஆண்டிற்குள் தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் தமிழ்நாட்டில் இளம் தலைமுறைகளிடம் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக விறுவிறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள் குறித்து விழிப்புணர்வு செயல் திட்டத்தை பொது சுகாதாரத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
நோயின் அபாயத்தை குறைப்பது, உடல் எடையை பராமரிப்பது, மன அழுத்தத்தை குறைப்பது, உடல் ஆற்றலை அதிகரிப்பது, மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றுவது, ரத்த ஓட்டத்தை சீராக்குவது, உடல் பருமனை குறைப்பது, நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிப்பது உட்பட விறு விறு நடையால் 20 நன்மைகள் கிடைப்பதாக தமிழக பொது சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.