யூகலிப்டஸ் மரங்கள் அதிக தண்ணீரை உறிஞ்சாது.. எல்லாமே கட்டுக் கதை..!! - மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2016-ம் ஆண்டில் யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு பெரும் பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்களை வளர்த்தால், தண்ணீர் பற்றாக்குறையை மக்கள் எதிர்கொள்வார்கள். எனவே குத்தகையை ரத்து செய்து மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காகித நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் வாதாடுகையில், பருத்தி, காபி, வாழை, சூரியகாந்தி, நெல், குதிரைவாலி, பட்டாணி, சோயா பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை காட்டிலும் யூகலிப்டஸ் மரங்கள் குறைந்த தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆராய்ந்து அறிவித்திருக்கிறது. இந்த மரங்கள் அதிக தண்ணீர் உறிஞ்சுகின்றன என வதந்தி பரப்பப்படுகிறது. தமிழக அரசின் முறையான அனுமதியை பெற்று, அதன்பின் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
விசாரணை முடிவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், யூகலிப்டஸ் மரங்களை வளர்த்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வழங்கப்படுகிறது. மேலும் யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என டேராடூன் வன ஆராய்ச்சி மையமும் தெரிவித்திருக்கிறது. மலைகளில் வளர்ப்பதை விட, சமவெளிகளில் யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் பெரும் தீங்கு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
உண்மையில் இவை மற்ற பயிர்களை விட குறைந்த தண்ணீரையே பயன்படுத்துகின்றன. இதனை தேசிய பசுமை தீர்ப்பாய தீர்வுகளும் உறுதிப்படுத்தி உள்ளது. எனவே, யூகலிப்டஸ் மரங்கள் நிறைய தண்ணீரை உறிஞ்சுபவை என்பது, ஒரு கட்டுக்கதையாக தோன்றுகிறது. இந்த மரங்களை வளர்ப்பதால் கோவிலுக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. சூழலியல், சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் தீங்கு என்பதை மனுதாரர் தரப்பில் நிரூபிக்கவில்லை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
Read more ; கர்நாடகாவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உருது மொழி கட்டாயம்..!! அரசின் முடிவினால் ஏற்படும் தாக்கம் என்ன?