'காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்' செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் அமல்!! : டாஸ்மார்க் நிர்வாகம்
காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில், மலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்து, காலி மதுபாட்டில்களை திருப்பி தரும் போது, அந்த கூடுதலாக வசூலித்த ரூ.10-யை திருப்பிக் கொடுக்கும், காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று இந்த சிறப்பு அமர்வு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.
இந்த திட்டம் ஊட்டி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டன. அதன்பின்னர், 12 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கு முன்னதாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தொகை விவரங்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாக இல்லை என்று கூறினர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், இந்த தொகையை சரி பார்த்து மீண்டும் புதிய அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தெளிவான அறிக்கையை அளிக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Read more | அடேங்கப்பா..!! உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் இங்க தான் இருக்கா..? சுவாரஸ்ய தகவல்கள்..!!