கட்டணத்தை வசூலிக்க பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் பயன்படுத்தக் கூடாது...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
நிலுவையில் உள்ள கட்டணத்தை வசூலிக்க பள்ளிகள் மாற்றுச் சான்றிதழை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள கட்டணத்தை வசூலிக்க பள்ளிகள் மாற்றுச் சான்றிதழை பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, ஏனெனில் இது மாணவருக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட ஆவணம். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அல்லது அறிவுறுத்தலை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மாற்று சான்றிதழ் தேவையில்லை என்றும், கட்டண பாக்கிகள் அல்லது தாமதமாக செலுத்துதல் தொடர்பான எந்த பதிவுகளையும் ஆவணத்தில் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் கேட்டு வலியுறுத்தக் கூடாது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பள்ளி கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும். எந்த ஒரு காரணத்திற்காகவும் மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளது.
மேற்கண்ட உத்தரவை வழங்கிய நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மேற்கண்ட உத்தரவுகளை மீறும் பட்சத்தில் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 17ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.