தடை செய்யப்பட்ட ரசாயனத்தை எண்ணையில் கலந்த பிரபல KFC நிறுவனம்..!! - தனியார் உணவகத்தின் உரிமம் ரத்து
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையின் போது, கேஎஃப்சி நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட மெக்னீசியம் சிலிகேட் என்ற ரசாயனம் எண்ணெயில் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகர் பகுதியில், தமிழ்ச் சாலையில் உள்ள வேலவன் மார்க்கெட் வளாகத்தில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் ஆய்வு கொண்டனர்.
அந்த ஆய்வின் போது, உணவு எண்ணெய்க்கு பயன்படுத்த அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிகேட்-சிந்தடிக் (Magnesium silicate - synthetic) என்ற உணவு சேர்மத்தை, ஏற்கனவே பயன்படுத்தியதும், அதனை மீதமாகி அப்புறப்படுத்த வேண்டிய பழைய உணவு எண்ணெய்யைத் தூய்மைப்படுத்துவதற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து 18 கிலோ மெக்னீசியம் சிலிகேட் ரசாயனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவு சமைக்க முடியாத கெட்டுப்போன 45 லிட்டர் பழைய எண்ணை, 12 மணி நேரத்துக்கு மேலாக பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த 56 கிலோ சிக்கன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்தும் உணவகத்திற்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக அதிகாரிகள் ரத்து செய்தனர். மறு உத்தரவு வரும் வரை உணவகத்தை திறக்கக் கூடாது எனவும் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை உத்தரவை மீறும் பட்சத்தில், வளாகம் மூடி சீல் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெக்னீசியம் சிலிக்கேட்- சிந்தெட்டிக் மற்றும் அதைப் பயன்படுத்தி, தூய்மைப்படுத்தப்பட்ட பழைய உணவு எண்ணெய் ஆகியவற்றிலிருந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொடர் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது.
Read more | 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்- A மாத்திரை…!