நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கிய விவகாரம்.. விடுதிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!!
திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் பயிற்சி ஆசிரியர் மாணவர்களை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், பயிற்சி மைய வகுப்பறையில் மாணவ - மாணவிகள் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது உள்ளே வரும் ஆசிரியர் ஒருவர் மாணவி மீது காலணி கொண்டு எறிகிறார்.
அந்த காலணி மாணவி மீது விழுகிறது. மாணவி பயிற்சி மைய வாசலில் முறையாக காலணியை கழற்றிவிடவில்லை என்று கூறி வீசியுள்ளார். அதுமட்டுமின்றி மாணவர்களை ஆக்ரோஷமாக திட்டுகிறார். அதுமட்டுமின்றி மாணவர்களை வரிசையாக வரவைத்து பிரம்பால் கண்மூடித்தனமாக மிகவும் கொடூரமாக தாக்குகிறார். மாணவர்கள் ஒவ்வொருவராக அவரிடம் பிரம்பு அடி வாங்கி கொண்டு சுவற்றின் அருகே சென்று நிற்கின்றனர். இதில் சில மாணவர்களின் கால், தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து அந்த ஆசிரியர் தப்பிச் சென்றார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இது தொடர்பாக மனித உரிமை ஆணைய அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் இதுதொடர்பாக போலீசாரும் சம்மன் அனுப்பி விசாரணையை துவக்கி உள்ளனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த பயிற்சி மையத்தின் விடுதி முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் நோட்டீஸ் குறித்து விடுதி மற்றும் நீட் பயிற்சி மையத்தின் நிர்வாகம் சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்படாத நிலையில் அந்த விடுதிக்கு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Read more ; ’’16 பெற்று பெருவாழ்வு வாழ்க’’..!! அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க சொன்ன முதல்வர் ஸ்டாலின்..? உண்மை என்ன..?