தக்காளியுடன் போட்டி போடும் வெங்காயம் விலை..!! காய்கறி சந்தையில் ஒரு கிலோ இவ்வளவா? - இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஏப்ரல் மே மாதத்தை விட செப்டம்பர் அக்டோபரில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் விவசாயத்திற்கு எதிர்பார்த்த மழை அளவு இல்லை. இதனால் போதிய அளவு காய்கறி உற்பத்தி இல்லாததால் புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளுக்கு காய்கறி வரத்து வெகுவாக சரிந்துள்ளது. தற்போது மழைக் காலம் துவங்கி இருக்கும் நிலையில் வரத்து குறைவால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் வெறும் 40 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த தக்காளி, கடந்த ஒரு வாரமாகவே விலை உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெறும் 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாயை தாண்டி உள்ளது. தற்போதைய சூழலில் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதனை வாங்கிச் சென்று வெளியில் சில்லறை விலையில் விற்கும் சிறு வியாபாரிகள் கூடுதல் லாபம் வைத்து 110 முதல் 120 ரூபாய் வரை விற்கின்றனர். இதனால் இல்லத்தரசிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக 35 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரே சமயத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Read more ; தீபாவளி போனஸ்..!! 2 முக்கிய அறிவிப்பு வரப்போகுது..!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!