ADMK | இனி இது வேலைக்கு ஆகாது.! 3 பேரும் இணையனும்.. எடப்பாடியை உலுக்கி எடுத்த 6 மாஜி அமைச்சர்கள்!!
அதிமுக மூத்த தலைவர்கள் பிரிந்து தேர்தலை சந்திப்பதால் தொடர் தோல்விகளே பரிசாக கிடைத்து வருகிறது. இந்தநிலையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மாஜி அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே விரைவில் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அந்த கட்சியில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறிவிட்டன. டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு சசிகலாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் தற்போது அதிமுக பல்வேறு தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்து வருகிறது. வாக்குகள் சிதறுவதால் எளிதாக கிடைக்கக்கூடிய வெற்றிகள் கூட கை நழுவி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. நேற்று எடப்பாடி பழனிசாமியை மாஜி அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். தற்போதைய நிலையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளனர்.
அதிமுகவின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான செங்கோட்டையன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, நந்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேற்று தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை என்பது சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நடந்துள்ளது.
இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தொடர் தோல்வி, தோல்வியில் இருந்து மீண்டு வருவது, 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராவது, 2026 சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் பாஜகவை எப்படி எதிர்கொள்வது? உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில் அதிமுக தலைவர்கள் தென்மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்துவது அவசியம் என்று எடுத்துரைத்துள்ளனர். இந்த வேளையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை ஒருங்கிணைப்பது பற்றிய விவாதம் எழுந்துள்ளது.
அதாவது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை அதிமுகவில் சேர்த்தால் தென்மாவட்டங்களில் கட்சிக்கு பலம் அதிகரிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு பிடி கொடுக்கவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க அவர் இசைவு தெரிவிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். எனவே மீண்டும் சந்தித்து தங்களது கோரிக்கை வலியுறுத்துவார்கள் என கூறப்படுகின்றது.