பார்வதி தேவியின் வியர்வையில் ஏற்பட்ட வெள்ளம்!… கங்கை நதி உருவான கதை!… இது ஏன் புனிதமான நீர் தெரியுமா?
உலகில் எந்த நாட்டிலும், எந்த நதிக்கும் இப்படி சிறப்பும், பெருமையும் கிடையாது. ஏனென்றால் கங்கை நதி இந்தியர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. தாயாக, கடவுளாக கங்கை நதியை இந்தியர்கள் போற்றுகிறார்கள். வழிபடுகிறார்கள். வட மாநில மக்கள் கங்கை நதியை வெறுமனே கங்கை என்று சொல்வதில்லை. `கங்கா மாதா' என்றுதான் சொல்வார்கள். ஜீவநதியான கங்கை இமயமலையில் உற்பத்தியாகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இமயமலையில் கங்கை எங்கு தோன்றுகிறது. என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. ஆய்வாளர்கள் எவ்வளவோ முயன்றும் அந்த நதி மூலம் புரியாத புதிராகவே உள்ளது.
இமயமலை சாரலில் உருவாகும் கங்கை நதி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாக பாய்ந்து மக்களை வாழ வைத்து, வளப்படுத்தி விட்டு வங்கக்கடலில் கலக்கிறது. இது புவியியல் ரீதியிலான உண்மை. ஆனால் புராணங்கள் மூலம்தான் கங்கையின் சிறப்பு இந்தியர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
திருக்கையிலையில் சிவபெருமான் நடைபயின்று கொண்டிருந்தார். அப்போது விளையாட்டாக, பார்வதி தேவி ஓசைப்படாமல் சென்று சிவபெருமானின் இரு கண்களையும் பற்றினார். உடன் உலகில் இருள் பரவியது. இதனால், உயிர்கள் அனைத்திற்கும் அளவில்லாத துன்பம் ஏற்பட்டது. உடனே, சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து உலகில் உள்ள அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர். அனைவரும் சிவபெருமானைப் போற்றினர்.
தன்னுடைய தவற்றை உணர்ந்த பார்வதி தேவியார் ஒரு நொடிப்பொழுதில் கைகளை எடுத்தார். ஆனால் அவரது கை விரல்களில் ஏற்பட்ட வியர்வை வெள்ளப் பெருக்காக உருவெடுத்து மூவுலகிலும் மிகப்பெரிய சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்தியது. இதனால் மூவுலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமானும் அவ்வெள்ளத்தை அடக்கி அதனைத் தனது சிரசில் ஓர் மயிர் முனையில் தரித்தார். இதனைக்கண்ட அனைவரும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர்.
பார்வதி தேவியின் கரத்தில் உருவான வியர்வைத் துளி மிகவும் புனிதமானது அதை, சிவபெருமான் தன்னுடைய முடியில் தரித்துக் கொண்டதால் அது மேலும் புதினமானது. எனவே, அதை தங்களுக்கு அந்த நீரை வழங்க வேண்டும் என்று பிரம்மா, விஷ்ணு, இந்திரன் ஆகிய மூவரும் கேட்டுக்கொண்டனர். அவர்கள் விருப்பம் கங்கை நதியை சிவபெருமான் வழங்கினார். பகீரதன் முயற்சியால் கங்கை பூமிக்கும் வந்து சேர்ந்தது. கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைத்து தனது சடாமுடியில் தாங்கியிருப்பதால் சிவபெருமானுக்குக் கங்காதர மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.
கங்காதர மூர்த்தியைத் தரிசிக்க இமய மலைக்குச் செல்ல வேண்டும். அங்குச் சென்று கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி அங்கு கிடைக்கும் கங்கை நீரை வீட்டிற்கு எடுத்து வந்து தெளிக்க இடம் புனிதமாகும். கங்காதர மூர்த்தியை மல்லிப்பூ அர்ச்சனையும், பாலில் செய்த இனிப்பு பண்ட நைவேத்தியமும் திங்கட்கிழமைகளில் சந்தியா காலத்தில் செய்தோமானால் செல்வச்செழிப்பும் இனியோர் பிறவி இல்லா நிலையும் ஏற்படும்.