தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு..!! இடத்தை தேர்வு செய்த விஜய்..!! அனுமதி கோரி மனு..!!
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் அக்கட்சியின் முதலாவது மாநில மாநாடு திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு நடிகர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்குவது போன்ற அரசியல் முன்னெடுப்புகளை திவீரமாக செய்துவருகிறார் விஜய்.
இந்நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் மாநாடு சேலத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியானது. ஆனால் அதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவதற்காக ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனுவில் மாநாட்டிற்கான தேதி குறிப்பிடாமல் கடிதம் வழங்கியதால், தேதி குறிப்பிட்டு கடிதம் வழங்குமாறு ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் ஜி கார்னர் மைதானம் எவ்வளவு ஏக்கர் பரப்பளவு கொண்டது என அளவிடும் பணியும் நடைபெற்றதாக தெரிகிறது. இது தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது மாநில மாநாடு அரசியல் களத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.