த.வெ.க கட்சி கொடிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்...! மகிழ்ச்சியில் தொண்டர்கள்
அரசியல் கட்சி கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என பதில் அளித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இதன் பிறகு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.
ஆகஸ்ட் 22-ம் தேதி விஜய் த.வெ.க கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றுள்ளது. மேலும் த.வெ.க பாடலையும் அறிமுகப்படுத்தினார். அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த உள்ளார் விஜய்.
இந்த நிலையில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது. விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், என கூறி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு வழங்கப்பட்டது.
சின்னங்கள், பெயர்கள் ( முறையற்ற பயன்பாட்டு) தடுப்புச் சட்டம் 1950-க்கு உட்பட்டு இருப்பது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும். கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும். அரசியல் கட்சி கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என பதில் அளித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.