முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மதுவை ஒழிக்க முடியலனா திமுக அரசு பதவி விலக வேண்டும்..! சீறிய அன்புமணி ராமதாஸ்

The DMK government should resign if it cannot eliminate alcohol
07:45 AM Oct 05, 2024 IST | Vignesh
Advertisement

மதுவை ஒழிக்க முடியாது எனில் தோல்வியை ஒப்புக்கொண்டு தமிழக அரசு பதவி விலக வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியமாகும் என்று சட்டத்துறை அமைச்சர் இரகுபதி கூறியிருக்கிறார். அமைச்சர் இரகுபதியின் பேச்சு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் குரலாகத் தெரியவில்லை. மாறாக, மது ஆலை அதிபர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுவதைப் போல இருக்கிறது. மதுவுக்கு ஆதரவான சட்ட அமைச்சர் இரகுபதியின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.

மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது. 2015-ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி பேசும் போது அடுத்த காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி பேசிய மு.க.ஸ்டாலின், அடுத்த காந்தியடிகள் பிறந்த நாளுக்குள் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றார். 2016-ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று பா.ம.க.வின் கொள்கை முழக்கத்தை காப்பியடித்து மு.க.ஸ்டாலின் முழங்கினார். 2021-ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தில்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இப்போது அதற்கு முற்றிலும் எதிராக அமைச்சர் இரகுபதி பேசுகிறார். அப்படியானால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினா, இரகுபதியா?

தேசிய அளவில் மதுவிலக்கு என்பதே போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல் தான். அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முழங்கும் திமுக, மக்கள் நலனுக்காக மதுவிலக்கு கேட்டால் மத்திய அரசை கேளுங்கள் என்பதும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் மத்திய அரசை கேளுங்கள் என்பதும் மக்களை முட்டாள்களாக நினைத்து ஏமாற்றும் செயல்கள்.

மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது கூட சாத்தியமற்றது என்று அமைச்சர் இரகுபதி கூறுகிறார்.’’ பாதி கடையை மூடுங்கள்; பாதியை திறங்கள் என்றால், 1 கி.மீ., து?ரம் சென்று குடியுங்கள் என்பது தான் அர்த்தம் என்பதால் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது” என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லை என்பதையும், திமுகவைச் சேர்ந்த மது ஆலை அதிபர்களின் கஜானாக்களை நிரப்புவதற்காக மட்டும் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பதை அமைச்சர் ரகுபதி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலின் முதல் இடத்தில் சட்டம்&-ஒழுங்கு, பொதுஅமைதி ஆகியவையும், எட்டாவது இடத்தில் மது விலக்கும் உள்ளன. மக்கள் நலன் கருதி இவற்றை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு உள்ளன. அதனால் மதுவிலக்கை மாநில அரசுகள் தான் செயல்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் மது விலக்கு இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அதை செயல்படுத்துவது சாத்தியமற்றது என்பது தோல்வியின் வெளிப்பாடு.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், கள்ளச்சாராயம் பெருகி விடும்; அத்தகைய நிலை உருவானால் மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக கள்ளச்சாராய ஒழிப்பில் மட்டும் தான் அரசு கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அமைச்சர் இரகுபதி கூறுகிறார். தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகாதா? அப்போது கள்ளச்சாராயத்தை தடுப்பது உள்ளிட்ட மாநிலத்தின் சட்டம் -& ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் திராவிட மாடல் அரசு தாரை வார்த்து விடுமா?அண்டை மாநிலத்தில் மது விற்பனை செய்யப்படும் போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்பதெல்லாம் நகைச்சுவையான போலி சாக்குகள். தமிழ்நாட்டைச் சுற்றிலும் மது வெள்ளமாக பாய்ந்து கொண்டிருந்த காலத்தில் தான் உத்தமர் ஓமந்தூரார், குமாரசாமி இராஜா, இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், பக்தவச்சலம், அறிஞர் அண்ணா ஆகியோர் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினர்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது, கள்ளச்சாராயத்தை தடுப்பது, அரசின் வருவாய் குறையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்தும் சாத்தியம் தான். அதற்கான வழிமுறைகளை பாட்டாளி மக்கள் கட்சி 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆவணமாக தயாரித்து வெளியிட்டுள்ளது. திராவிட மாடல் அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags :
anbumaniBan tasmacmk stalintasmactn government
Advertisement
Next Article