"ஆஹா... என்ன பழக்கம் இது."? புத்தாண்டை வினோதமாக கொண்டாடும் நாடுகள்.!
2024 ஆம் வருடத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க கோலாகலத்துடன் தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டாலும் கலாச்சாரத்தின் அடிப்படையில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு நாடுகளுக்கு நாடு மாறுபடுகிறது. உலகின் பல்வேறு நாடுகள் தங்களது கலாச்சார மரபின்படி புத்தாண்டை எவ்வாறு வரவேற்கிறார்கள் என்பதை காணலாம்.
ஸ்பெயின் நாட்டில் புத்தாண்டு வரும் நள்ளிரவில் 12 திராட்சைகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் வர இருக்கின்ற 12 மாதங்களும் அதிர்ஷ்டங்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் புத்தாண்டை இவ்வாறாக வரவேற்கிறார்கள். ஜப்பான் நாட்டில் புத்தாண்டு அன்று கோவில் மணிகள் 108 முறை ஒலிக்கப்படுகிறது. இதில் 108 முறை என்பது மனிதனுக்கு துன்பங்களைத் தரும் 108 ஆசைகளை குறிப்பதாகும். ஸ்காட்லாந்து நாட்டில் ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டிற்கு வரும் முதல் நபரை அதிர்ஷ்டங்களை சுமந்து வரும் நபராக பார்க்கிறார்கள். இந்த நபர் ஃபர்ஸ்ட் ஃபுட்டர் என்றும் அழைக்கப்படுகிறார். பிரேசில் நாட்டு மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வெள்ளை நிற உடை அணிந்து பூக்களை கடலில் தூவி புத்தாண்டை வரவேற்கிறார்கள் .
டென்மார்க்கில் புத்தாண்டை வரவேற்பதற்காக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டில் தட்டுகளை தூக்கி எறிந்து கொண்டாடுகிறார்கள். கிரீஸ் நாட்டில் புத்தாண்டு வரவேற்பதற்காக கேக் செய்து அதில் நாணயத்தை மறைத்து வைப்பார்கள். அந்த நாணயத்தை கண்டுபிடிக்கும் நபருக்கு அந்த ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பது நம்பிக்கை. தென்னாப்பிரிக்க நாட்டில் புத்தாண்டு வரவேற்பதற்காக வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை ஜன்னல் வழியாக வெளியே வீசி கொண்டாடுவார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் வட்ட வடிவம் அதிர்ஷ்டங்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வட்ட வடிவ புள்ளிகளைக் கொண்ட ஆடைகளை அணிவதோடு வட்ட வடிவில் இருக்கும் பழங்களையும் உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.