2026 தேர்தலை நடத்த போகும் முதல் பெண் அதிகாரி...! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி
தமிழகத்திற்கு புதிய தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது
இந்திய தேர்தல் ஆணையம் MSME செயலாளர் அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி, சத்யபிரதா சாஹூவுக்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார். முன்னதாக, 2002 பேட்ச் தமிழ்நாடு கேடரின் ஐஏஎஸ் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக், கோயம்புத்தூர் கலெக்டராகவும் பணியாற்றினார், 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
ஏற்கெனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரத சாஹுவுக்கு அண்மையில் கூடுதலாக கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறைகள் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டன. இனி அவர் இந்த துறைகளின் செயலராகப் பணியாற்றுவார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெயர் இவருக்கு கிடைத்து உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை முன்நின்று நடத்தும் வாய்ப்பு இவருக்கு உருவாகியுள்ளது.