மாநகராட்சி ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! இனி உரிய நேரத்தில் சம்பளம்.. பதிவேடு மூலம் வருகை பதிவு!!
தற்காலிக பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கிட , வருகை பதிவேடு முறையை சென்னை மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது.
மாநகராட்சி ஊழியர்கள் தான் தூய்மை பணி, குடிநீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை பணி உள்பட அன்றாடம் செய்யும் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்கள். நிரந்தர பணியாளர்களை தாண்டி, சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுக்கள் மற்றும் வெளிமுகமை மூலமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி தற்காலிக பணியாளர்களுக்கு மாதம்தோறும் உரிய தேதியில் ஊதியம் கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டுகளை கடந்த கால மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பினார்கள். இந்த பிரச்சினையை சரி செய்ய கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகள், இந்த பிரச்சனைக்கு உரிய முறையில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.
இந்த நிலையில், தற்காலிக பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கிடும் வகையில் முக அங்கீகார வருகை பதிவேடு முறையை சென்னை மாநகராட்சி அமல்படுத்தி இருக்கிறது. இதற்கான மென்பொருளை சென்னை மாநகராட்சியின் தகவல் தொழில்நுட்ப மையமே உருவாக்கி உள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்தியே இனி முக அங்கீகார வருகை பதிவேடு எடுக்கப்பட தீர்மானிக்கப்பட இருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்கள் மற்றும் வட்டார அலுவலகங்களில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களின் வருகை, வங்கி கணக்கு விவரம், ஆதார் எண், பணிபுரியும் இடம் ஆகியவை இந்த மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய நடைமுறையின்படி மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் காரணமாக சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் இனி கிடைக்கும். முன்பு சம்பளம் வழங்க பணியாளர்கள் கையெழுத்திடும் வருகை பதிவேடு முறை கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய நடைமுறையால் மாதம் தோறும் 5-ந் தேதிக்குள் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என கூறிய அதிகாரிகள், அதற்கு வருகை பதிவினை முக அங்கீகார முறையிலான வருகை பதிவாக பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த நடைமுறை கடந்த 1-ந் தேதி முதல் அமலாகியுள்ளது என்றும் கூறினார்கள்.
இதேபோல, தற்காலிக பணியாளர்களின் வருகை பதிவு முந்தைய மாதத்தின் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கணக்கிடப்படும் என்றும், இந்த வருகை பதிவை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் நிர்வாக அலுவலர்கள் உறுதி செய்வார்கள் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இந்த வருகை பதிவேடு மூலம் அரசு ஊழியர்கள் போன்று ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் ஊதியம் பணியாளர்களுக்கு இனி கிடைக்க போகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read more ; அதிகாலையிலே சோகம்.. மகளிர் விடுதியில் பயங்கர தீ விபத்து..!! 2 பேர் உடல் கருகி பலி..