சாலையோர வாகனங்களால் இடையூறு? இனி இத செய்ங்க.. சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை..!!
சென்னையில் சாலையோரங்களிலும், பல்வேறு பஸ் வழித்தடங்களிலும் கேட்பாரற்று வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது. இத்தகைய வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் சாலையோரம் நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டால் தகவல் அளிக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூறுகையில், "சாலையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால், மாநகராட்சியின் எக்ஸ் தளம் மூலமாகவும்.. 1913 என்ற எண் மூலமாகவும் பொதுமக்கள் புகாரளிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான், "பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதை குறைக்கும் விதமாகவும் குறிப்பிட்ட சில இடங்களில் குப்பை பணிகளை நள்ளிரவுக்கு மாற்ற முடிவு மாநகராட்சி முடிவு செய்தது. அதாவது, 400 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இரவு நேரத்தில் தூய்மை பணி நடைபெற உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குப்பைகளை சேகரிக்க முடியும் என்பதோடு, தூய்மை பணியாளர்களும் சிரமம் இன்றி வேகமாக பணியை செய்ய முடியும் என்பதால் மாநகராட்சி இந்த முடிவை எடுத்தது. முன்னதாக கடந்த ஆண்டு, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றி ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா மாமன்றக் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, சாலையோரங்களில் கேட்பாரற்று கிடந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இத்தகைய வாகனங்களை ஏலம் விட மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான், சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அகற்றப்படாமல் இடையூறாக இருப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, தற்போது மாநகாட்சி இந்த பிளானை கையில் எடுத்துள்ளது.
Read more; மத்திய அரசு அதிரடி…! பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய SHe-Box இணையதளம்…!