மக்களே..! நாடு முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றம்...! முழு விவரம்
நாடு முழுவதும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றம் குறித்து பார்க்கலாம்.
தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு உறுதுணைபுரியும் வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு மாறும் அகவிலைப்படியை (வி.டி.ஏ) திருத்துவதன் மூலம் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த சரிசெய்தல் உயரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க, தொழிலாளர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கட்டிட கட்டுமானம், ஏற்றுதல் மற்றும் இறக்குதல், அவைக்காவலர், தூய்மைப் பணி, வீட்டு பராமரிப்பு, சுரங்கம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களால் பயனடைவார்கள். புதிய ஊதிய விகிதங்கள் அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். கடைசி திருத்தம் ஏப்ரல் 2024-ல் மேற்கொள்ளப்பட்டது.
கட்டுமானம், தூய்மைப்பணி, ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றில் உள்ள ஏ பகுதியில் குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் ஒரு நாளைக்கு ரூ.783 (மாதத்திற்கு ரூ .20,358), அரை திறமையான ரூ.868 ஒரு நாளைக்கு (மாதத்திற்கு ரூ.22,568), திறமையானவர்கள், எழுத்தர்கள் மற்றும் அவைக்காவலர்கள் ஒரு நாளைக்கு ரூ .954 (மாதத்திற்கு ரூ.24,804) மற்றும் மிகவும் திறமையான மற்றும் வாட்ச் & வார்டு ஒரு நாளைக்கு ரூ.1,035 (மாதத்திற்கு ரூ.26,910). தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டில் ஆறு மாத சராசரி அதிகரிப்பின் அடிப்படையில், ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 1 வரை மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை வி.டி.ஏவை திருத்துகிறது.
மற்ற மாற்றங்கள் ;:
பான் கார்டு விண்ணப்பம், வருமான கணக்கு தாக்கல் படிவம் ஆகியவற்றில் ஆதார் எண்ணுக்கு மாற்றாக, ஆதார் பதிவு அடையாள எண்ணை குறிப்பிட வழங்கப்பட்ட அனுமதி அக்டோபர் 1ஆம் தேதி முதல் நீக்கப்படுகிறது. போலியாக, தவறாக பான் கார்டு பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் இதனை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
பை - பேக் முறையில் வாங்கப்படும் பங்குகளுக்கு, நிறுவனங்களுக்கு பதிலாக முதலீட்டாளர்களின் வருவாய் மீது அக்டோபர் 1ஆம் தேதி முதல் வரி விதிக்கப்படும். மாறும் வட்டி உட்பட மத்திய, மாநில அரசு பத்திரங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு, 10 சதவீத வரிப் பிடித்தம் செய்யப்படும். முதலீட்டின் மீது ஆண்டுக்கு ரூ.10,000 வரை வருமானத்துக்கு 1-ம் தேதி முதல் வரிப்பிடித்தம் இல்லை.
காப்பீடு, லாட்டரி, தரகு, மின்னணு வர்த்தகம் உட்பட சிலவற்றுக்கு, டி.டி.எஸ்., எனப்படும் வரிப் பிடித்தம் குறித்த பட்ஜெட் அறிவிப்பும் அமலுக்கு வரவுள்ளது. இதில், மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கான வரிப்பிடித்தம், 1 சதவீதத்தில் இருந்து, 0.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. வரி பாக்கி தொடர்பான வழக்குகள், தாவாக்களை தீர்த்துக் கொள்வதற்கான, 'விவாத் சே விஸ்வாஸ்' திட்டம், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது.