பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு...! மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு...!
பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில்; மத்திய அரசின் கல்வி அமைச்சகம், பள்ளிகள், பிற கல்வி நிறுவனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தவும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித் துறை 'பள்ளி பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை 2021 ஆம் ஆண்டில் உருவாக்கியது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பை நிர்ணயிக்க இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தரப்பினரின் பொறுப்புடைமை, அறிக்கை அளிக்கும் நடைமுறை, சம்பந்தப்பட்ட சட்ட விதிகள், ஆதரவு, ஆலோசனை, பாதுகாப்பான சூழல் ஆகியவற்றிற்கான வழிமுறைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் அணுகல், உள்ளடக்கம், நேர்மறையான கற்றல் விளைவுகளுக்கு முக்கியமானவை.
இந்த வழிகாட்டுதல்கள் 01.10.2021 அன்று அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்த வழிகாட்டுதல்கள் மத்திய பள்ளி கல்வித்துறையின் இணையதளமான https://dsel.education.gov.in/sites/default/files/2021-10/guidelines_sss.pdf என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அலட்சியமான செயல்பாடுகளுக்கு எதிராக சமரசமற்ற கொள்கையை கடைபிடிப்பதுமே இதன் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .