முதல்முறையாக மக்கள் போராட்ட களத்திற்கு செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! அனுமதி வழங்கிய காவல்துறை..!!
தவெக தலைவர் விஜய், பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை வரும் 20ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி 5,100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 900 நாட்களை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து விஜய் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். இதற்காக நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கூட பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், தவெகவினர் இதுவரை எந்தவிதமான போராட்டத்திலும் பெரிதாக ஈடுபடவில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளி வராமல் விஜயால் அரசியல் செய்ய முடியாது என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தரப்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போராட்டக்குழுவை சந்தித்து பேசவும், பாதுகாப்பு வழங்கக் கோரியும், விஜய் தரப்பில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்த நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பரந்தூர் செல்லும் விஜய், போராட்டக் குழுவினரை சந்தித்து ஆதரவு வழங்கவுள்ளார். த.வெ.க ஆரம்பித்த பிறகு விஜய் முதன்முறையாக போராட்ட களத்திற்கு செல்கிறார். நேற்று, ஏகனாபுரம் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.