காட்பாடியில் பயங்கரம்!. இன்ஜின் இல்லாமல் ஓடிய எக்ஸ்பிரஸ் ரயில்!. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு!
Kadbadi Train: காட்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென கப்ளிங் உடைந்ததால், சில பெட்டிகள் இன்ஜின் இல்லாமல் ஓடிய சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கொல்கத்தா, விசாகப்பட்டினம், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, கோவை, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 8.40 மணியளவில் ராணிப்பேட்டை அருகில் முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தை கடந்த போது திடீரென இன்ஜின் தனியாக கழன்று ஓடியது.
இதனால் ரயில் பெட்டிகள் 1 கி.மீ. தூரம் வரை தனியாக ஓடியது. ரயில் கட்டுப்பாடின்றி ஓடுவதை உணர்ந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இன்ஜினை உடனடியாக நிறுத்த முடியாத நிலையில், பின்னால் வரும் ரயில் பெட்டிகள் வந்து மோதும் அபாயம் ஏற்படும் என்பதாலும், டிரைவர் தொடர்ந்து இன்ஜினை இயக்கினார். பயணிகள் பெட்டி தானாக நின்றதும், சிறிது தூரத்தில் இன்ஜினையும் டிரைவர் நிறுத்தினார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரக்கோணம், காட்பாடி ரயில் நிலையங்களில் இருந்து ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள் விரைந்து சென்று இன்ஜினையும் பெட்டிகளையும் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் கழன்று ஓடிய இன்ஜினை 'ரிவர்ஸ்' எடுத்து சென்று பெட்டிகளுடன் இணைக்க முடிவு செய்தபோது 'கப்ளிங்' உடைந்து விழுந்திருப்பது தெரியவந்தது.
இதனால் அந்த இன்ஜின் திருவலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு பெட்டிகளுடன் காலை 10.50 மணியளவில் இணைத்தனர். பின்னர் ரயில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றது. இன்ஜின் தனியாக கழன்று சென்றபோது சம்பவ இடத்தில் நடக்கும் பால பணியால் ரயில் வெறும் 20 கி.மீட்டர் வேகத்தில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Readmore: குட்நியூஸ்!. மின்சாரச் செலவை குறைக்க புதிய திட்டம்!. ரூ.78,000 தமிழக அரசு மானியம்!