Pawan Kalyan | நடிகர் பவன் கல்யாண் மீது கல் வீசி தாக்குதல்.!! தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு.!!
Pawan Kalyan: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியை உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்ட தேர்தல் வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே 13ஆம் தேதி நடைபெற உள்ளது. 25 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கம்யூனிஸ்டுடன் கூட்டணி அமைத்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடக்க இருப்பதால் அங்கு அரசியல் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் பவன் கல்யாண் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண்(Pawan Kalyan) ஆந்திராவின் குண்டூர் தெனாலி பகுதியில் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் மீது கல்வீசி தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பவன் கல்யாண் காயங்கள் இன்றி தப்பினார். மேலும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மீதும் மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் முதல்வர் லேசான காயங்களுடன் தப்பினார்.