மயோனைஸ் உயிருக்கு ஆபத்து...? மாநிலம் முழுவதும் ஓராண்டு தடை...! அரசு அதிரடி உத்தரவு...!
முட்டை வைத்து தயாரிக்கப்படும் மயோனைஸை தயாரிக்கவும், விற்கவும் ஓராண்டு தடை விதித்து தெலங்கானா அரசு உத்தரவு. தெலங்கானாவில் அண்மையில் ரேஷ்மா பேகம் (31) என்பவர் சாலையோரத்தில் விற்ற மயோனைஸ் கலந்த மோமோஸை சாப்பிட்டு உயிரிழந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் சுகாதாரமற்ற மயோனைஸ் உட்கொண்டதால் பலர் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் முட்டைகளைப் பயன்படுத்தி மயோனைஸ் தயாரிப்பதை ஒரு வருடத்திற்கு தடை செய்துள்ளது. அக்டோபர் 30ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் வகையில் உணவு பாதுகாப்பு ஆணையர் தடை விதித்தார். பொது சுகாதார நலன் கருதி பச்சை முட்டைகளை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
மயோனைஸ் - சாலட் டிரஸ்ஸிங்காகப் பயன்படுத்தப்படும் அல்லது சாண்ட்விச்கள், மற்றும் பிற தின்பண்டங்களுடன் பரிமாறப்படும் ஒன்றாகும். முட்டையின் மஞ்சள் கருவை எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை அடிப்படையில், உணவுப் பாதுகாப்புத் துறையுடன் சுகாதார அமைச்சர் தாமோதர ராஜா நரசிம்ஹா நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸ் பயன்படுத்த தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் புதன்கிழமை (அக்டோபர் 30), ஹைதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட ஒரு பெண் மரணித்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியில் உண்டாக்கியது மற்றும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மரணம் தொடர்பாக தெருவோர வியாபாரிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், மயோனைஸ் பொதுவாக மோமோஸுடன் பரிமாறப்படாததால், இந்த மரணங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. இருந்தாலும் மாநில அரசு அதற்கு தடை விதித்துள்ளது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.