செக்...! வரும் 23-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் இந்த செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்...!
வரும் 23-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கணிப்பொறிகள் (Desktop Computers), மடிக்கணினிகள் (Laptops) மற்றும் ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் (TABs) வழங்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழ்நாட்டில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகளும் (Smart Class Room) நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்களும் (High Tech Labs) தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டில் புதிய அறிவியல் நுட்ப பயன்பாடுகளின் வழியாக சிறந்த அனுபவங்களை மாணவர்கள் பெருமளவில் பெற்றிட முடியும்.
இத்தகைய கணினி சார்ந்த புதிய அறிவியல் நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டிற்கு பெரிதும் துணைபுரியும் வகையில் மணற்கேணி செயலி வடிவமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அறிவுரைகள் சார்ந்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் உடனடி கவனம் பெரிதும் ஈர்க்கப்படுகிறது.
விரைவு துலங்கல் குறியீடு (Quick Response Code-QR Code ) அனைத்து பள்ளிகளிலும் ஒட்டப்பட்டு உள்ளதா என்பதையும் அதன் வழியாக ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் பாடப்பொருளுக்கு ஏற்றவாறு மாநில பாடத்திட்ட புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களுக்கான காணொலி காட்சிகளின் வீடியோக்களை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை மேம்படுத்துகின்றார்களா என்பதையும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப் பார்வை/ஆய்வுகளின் போது உறுதி செய்திடல் வேண்டும். மேலும் எத்தனை பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதை 21.01.2025ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கண்டறிய வேண்டும்.
மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்யாத பள்ளிகள் / ஆசிரியர்களை 23.01.2025ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலரும் (தொடக்கக் கல்வி) மேற்கொள்ள வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வினை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஏற்படுத்திடவும் இச்செயலியை அக்கூட்டம் நடைபெறும் நாளன்றே அவர்களது பெற்றோர்களின் கைபேசியில் Google Play Store-யில் இருந்து பதிவிறக்கம் செய்து கொடுத்து அச்செயலி வழியாக பாட விவரங்களை எவ்வாறு மாணவர்கள் வீட்டில் பயன்படுத்தி கற்க முடியும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.