கிராம மக்களின் வினோத வழிபாடு!உடலில் வைக்கோல்களை சுற்றிக்கொண்டு ஊர்வலம்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஏழைகாத்த அம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமங்களின் தலைமை இடமாக வெள்ளலூர் கிராமம் கருதப்படுவது .
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் நடைபெறும் இக்கோவில் திருவிழாவில் 60 கிராம மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். விழா தொடங்கியதும் வௌ்ளலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள். விழாவில் அந்த கிராமத்தை சேர்ந்த 7 சிறுமிகள் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வழிபடுவர். இந்த சிறுமிகள் மேலாடை இல்லாமல் சாமியாக அலங்கரித்து கோவிலில் 15 நாட்கள் தங்க வைப்பர். இந்த 15 நாட்களும் மேலாடை இல்லாமல்தான் கோவில் வீடு எனப்படும் இடத்தில் சிறுமிகள் விரதம் இருக்க வைப்பர்.
இதனை தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது நடுத்தர வயதுடைய பெண்கள் 1000-க்கும் மேற்பட்டோர் மதுக்கலயம் ஏந்தி வெள்ளலூர் ஏழைகாத்த மாரியம்மன் கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பெரிய ஏழைகாத்த அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வருவர்.
இதேபோல் ஆண்கள், சிறுவர்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரி போர்த்தி பலவித வேடங்களை அணிந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். பொதுமக்கள் பலர் சிறிய தெய்வ சிலைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக எடுத்து செல்வர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பெண் குழந்தைகளை மேலாடை இல்லாமல் தங்க வைப்பதும் ஊர்வலமாக அழைத்து செல்வதும் அவர்களது உரிமைகளை மீறுகிற செயல் என புகார் எழுந்தது. இதுதொடர்பாக அரசு தரப்பில் விசாரணை மேற்கொண்டதில், அவர்களைப் பொறுத்தவரையில் மதம் சார்ந்த நம்பிக்கையாக, பாரம்பரியமாக நடத்தப்படுகிற திருவிழா என தெரியவந்துள்ளது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டியில் ஆண்டுதோறும் நிலாப்பெண் என ஒரு சிறுமி தேர்வு செய்யப்படுவார். அவரை சாமியாக முன்வைத்து திருவிழா நடைபெறும். பவுர்ணமி நாளில் அந்த நிலாப்பெண்ணை ஆவாரம்பூக்களால் அலங்கரித்து வழிபாடு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.