தூள்..! தேனீ வளர்ப்பு... சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கும் தமிழக அரசு...! முழு விவரம்
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தேனீ வளர்ப்பினை மேற்கொள்ள ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் ஒரு சிறப்புத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தேனீ வளர்ப்பினை மேற்கொள்வதற்குத் தேவையான பயிற்சி, தொழில்நுட்ப உதவி, உட்கட்டமைப்பு மற்றும் நிதி உதவியினை வழங்கிடும் வகையில், நடப்பாண்டில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் ஒரு சிறப்புத் திட்டத்தினை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தேனீ வளர்ப்பினை சுய உதவிக் குழுவினரிடையே ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு தேனீ வளர்ப்புத் தொகுப்பிற்கும் ரூ.3 இலட்சம் சுழல் நிதி வழங்கி, தமிழ்நாட்டில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
20 மகளிர் கொண்ட ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தேனீ பெட்டிகள் வீதம் மொத்தம் 100 தேனீப் பெட்டிகள் வாங்குவதற்காக ரூ.1.5 இலட்சமும், முகக்கவசம், புகைமூட்டி, தேனீ பிரஷ், தேன் பிரித்தெடுக்கும் கருவி போன்ற உபகரணங்கள் வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாயும், தேன் சுத்திகரிப்பு, பதப்படுத்தும் இயந்திரம் கொள்முதல் செய்வதற்கு ரூ.1.15 இலட்சமும், இவ்வியந்திரங்களை நிறுவுவதற்கு 11 ஆயிரம் ரூபாயும், தேனீ வளர்ப்பு, தேன் பதப்படுத்துதல் தொடர்பான பயிற்சிக்கு 4 ஆயிரம் ரூபாயும் என ஒவ்வொரு தொகுப்புக்கும் ரூ.3 இலட்சம் சுழல் நிதியாக வழங்கப்படுகிறது.