தமிழக அரசு பொங்கல் தொகுப்பு... குறைகள் இருந்தால் உடனே இந்த எண்ணுக்கு புகார் தெரிவியுங்க...!
பொங்கல் பரிசு வழங்குவதற்காக 5,40,033 முழுக்கரும்பு நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒருமுழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 5,39,303 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 730 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 5,40,033 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
இப்பொங்கல் பரிசு வழங்குவதற்காக 5,40,033 முழுக்கரும்பு நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள அலுவலர்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின்தரம், உயரம் ஆகியவற்றை வேளாண்மைத்துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரியபடிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரியதொகை விவசாயிகளின் வங்கிகணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களில் ஒன்றான கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம். கரும்பு கொள்முதலுக்காக மாவட்ட அளவிலான குழு, வட்டார அளவிலானகுழு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்ய வரும் அலுவலர்கள் குறித்த முழுமையான விவரம் மற்றும் எந்த மாவட்டத்திற்கு தங்களிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளவேண்டும். இது தொடர்பாக உதவி மைய தொலைபேசி (Help line) எண்.0486-280272 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.