முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'3,000 கி.மீ. கடல் பயணம்., நடுக்கடலில் 14 நாட்கள்..' ஈரானில் இருந்து தப்பிய தமிழக மீனவர்கள்! நடந்தது என்ன?

02:11 PM May 08, 2024 IST | Mari Thangam
Advertisement

ஈரான் நாட்டிலிருந்து தப்பி 3 ஆயிரம் கி.மீ. கடல் பயணமாக மீன்பிடி படகில் கேரள கடற் பகுதிக்கு வந்த தமிழக மீனவர்கள் 6 பேரை கடலோரக்காவல் படையினர் மீட்டனர்.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி நித்திய தயாளன் (30), அருண் தயாளன் (27), கலைதாஸ் (45), வாலாந்தரவை ராஜேந்திரன் (30), பாசிப்பட்டினம் முனீஸ்வரன் (37), கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மரியடேனியல் (38) ஆகிய 6 பேரும் கடந்த 26.03.2023 அன்று ஈரான் நாட்டுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக மீன் பிடிக்கச் சென்றனர். ஈரானில் செய்யது சவூத் ஜாஃரி என்பவர் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் கொத்தடிமையாக நடத்தியுள்ளார்.

மேலும், மீனவர்கள் தங்கள் குடும்பம் நாங்கள் பணம் அனுப்பாததால் பசியால் வாடி வருகிறது என்று சொல்லியும் சையிது, அவர்களது பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டு கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்துள்ளார். மீனவர் ஒருவரின் குழந்தை இறந்த போதும் கூட அவரையும் வீட்டுக்கு அனுப்பாமல் மிரட்டியுள்ளார்.

மீனவர்கள் சம்பளம் கேட்டால் அவர்களை அடிப்பது, பயமுறுத்துவது வீட்டுக்குச் செல்ல பாஸ்போர்ட் கேட்டாலும் கொலை செய்வேன் என மிரட்டி, கொத்தடிமைகளாக நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் எப்படியாவது சையிதுவின் பிடியிலிருந்து தப்ப வேண்டும் என திட்டமிட்டு, மீன் பிடிக்கச் செல்வது போல் அங்கிருந்து புறப்பட்டு கடல் மார்க்கமாக இந்தியா வந்துள்ளனர்.

இதையடுத்து 15 நாட்களுக்கு முன்னர் இந்த 6 மீனவர்களும், செய்யது சவூத் ஜாஃரியின் மீன்பிடி படகு மூலம் ஈரானிலிருந்து புறப்பட்டு அரபிக் கடல் வழியாக கடந்த 5-ம் தேதி கேரள மாநில கடற்பகுதிக்கு வந்தனர். அப்போது படகில் டீசல் முழுமையாகத் தீர்ந்து விட்டது. இதனால், நடுக் கடலில் தத்தளித்த 6 மீனவர்களும் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொண்டு டீசல் இன்றி கடலில் தவிப்பதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த தமிழக மீனவ அமைப்புகள் இந்திய கடலோரக் காவல் படையினரிடம், அரபிக் கடலில் டீசல் இன்றி தவிக்கும் மீனவர்கள் குறித்தும், அவர்களை மீட்கும்படியும் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கடலோரக் காவல் படையினர் இரண்டு ரோந்து கப்பல்களில் சென்று, நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை படகுடன் மீட்டு கொச்சி கடற்படை முகாமுக்குக் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தப்பி வந்த மீனவர் ஒருவர் கூறியதாவது, ஈரான் நாட்டில் சையிது சவுது ஜாபரி என்பவரது விசைப்படகில் மீன்பிடித் தொழில் செய்வதற்காக நாடு விட்டுச் சென்றோம். அங்கு சையிது சவுது ஜாபரி பேசியபடி எங்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமல், கொத்தடிமைகளாக பணி செய்ய வைத்தார். எங்கள் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டார்.

அங்கிருந்து தப்பித்து எப்படியாவது இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகு மூலமாக இந்தியாவுக்கு ஏப்ரல் 22ஆம் தேதி கடல் வழியாக பயணம் செய்தோம். நான்காவது நாள் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டது. அந்த வழியாக வந்த ஒரு அமெரிக்கா நாட்டு அரசுக் கப்பல், எங்களுக்கு உணவும், முதலுதவி மருந்துகளும் கொடுத்து எங்கள் உயிரைக் காப்பாற்றினர்.

14 நாட்கள் கடல் வழியாக பயணம் செய்து, இறுதியில் இந்தியக் கடலுக்குள் கேரள ஆழ் கடல் பகுதியில் படகு வந்து சேர்ந்தபோது, படகில் இருந்த டீசல் முழுமையாக தீர்ந்து விட்டது. இதனால் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு தங்களைக் காப்பாற்றும்படி கூறினோம்.

எங்கள் குடும்பத்தினர் உடனே மீனவ அமைப்புகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். மீனவ அமைப்புகள் உடனடியாக இந்தியக் கடலோர காவல் படையை தொடர்பு கொண்டு, எங்களை மீட்க கோரிக்கை வைத்துள்ளனர். பின்னர், இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான 'அனுபவ்' என்ற கப்பல் மூலமாக நாங்கள் மீட்கப்பட்டு கொச்சியில் கரை சேர்ந்தோம். எங்களுக்கு உணவும், மருந்தும் அதிகாரிகள் தந்தனர். இந்தியக் கடலோர காவல் படையைச் சந்தித்த பின்பு தான் தாங்கள் உயிரோடு கரை சேருவோம் என்ற நம்பிக்கையே வந்தது” என்று உருக்கமாக கூறினார்.

Advertisement
Next Article