இரண்டு மூத்த IAS அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு..!! TN Govt அதிரடி உத்தரவு
தமிழகத்தில் அமுதா ஐஏஎஸ், மணிகண்டன் ஐஏஎஸ் ஆகிய இரு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அமுதா ஐஏஎஸ் வருவாய்த் துறையின் முதன்மை செயலாளராக உள்ளார்.
ஏற்கெனவே உள்துறை செயலாளராக இருந்த அமுதா, வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு தற்போது முழு கூடுதல் பொறுப்பாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் பொறுப்பையும் கவனிப்பார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக இருந்த பிரபாகர், டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டதால் அந்த பதவி காலியாக இருந்ததால், தற்போது அமுதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அது போல் நீர் வளத் துறை செயலாளர் மணிவாசன் ஐஏஎஸ், முழு கூடுதல் பொறுப்பாக விழிப்பு பணி ஆணையர், நிர்வாக சீர்திருத்த ஆணையர் ஆகிய பணிகளை கவனிப்பார் என முருகானந்தம் ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். அண்மைக்காலமாக தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள்.
தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக முதல்வரின் தனிச் செயலாளராக இருந்த முருகானந்தம், தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்கு 14 நாட்கள் பயணமாக செல்கிறார். அங்கு தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்களை செயல்படுத்தவுள்ளார். இந்த நிலையில் இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.