"வலியே இல்லாம தற்கொலை பண்ணிக்க நவீன மிஷின் வந்தாச்சு.." வாங்க 'மிஸ்டர் டெத்' பற்றி தெரிஞ்சுக்கலாம்.!
தீவிரமான மன அழுத்தம் மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் தினமும் தற்கொலை செய்து வருகின்றனர். தற்கொலை என்பது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கிறது. மேலும் உலகின் பல்வேறு நாடுகளும் தற்கொலை எண்ணத்திற்கு எதிராகவும் தற்கொலை மனநிலையில் இருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கும் கவுன்சிலிங் மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
எனினும் உலகின் சில நாடுகளில் கருணை கொலை மற்றும் தற்கொலை ஆகியவை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன. தற்கொலையை அங்கீகரிக்கும் நாடுகளில் ஒன்றுதான் சுவிட்சர்லாந்து. இந்த நாட்டில் வலியில்லாமல் தற்கொலை செய்வதற்கு என நவீன இயந்திரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எக்ஸிட் இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் "மிஸ்டர் டெத்" என்ற வலியில்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்து இருக்கிறது. இதற்கு அந்த நாட்டு அரசிடம் அனுமதியும் பெற்றுள்ளது.
தற்கொலை மற்றும் கருணை கொலை செய்ய விரும்பும் நபர்கள் இந்த இயந்திரத்தை வாங்கி அதற்குள் படுத்தால் போதும். 30 நிமிடங்களில் வலியில்லாமல் மரணம் சம்பவிக்கும் என "மிஸ்டர் டெத்" இயந்திரத்தை கண்டுபிடித்த எக்ஸிட் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவிக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் நபர் இந்த இயந்திரத்தில் படுத்துக்கொண்டால் இயந்திரம் அவர் ஆக்சிஜன் சுவாசிக்கும் அளவை குறைத்து நைட்ரஜன் வாயுவை அதிக அளவில் சுவாசிக்கச் செய்யும். இதன் மூலம் அந்த நபர் சுயநினைவை இழந்து விடுவார்.
இதனைத் தொடர்ந்து சில வினாடிகளில் அவரது உயிர் பிரியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மிஸ்டர் டெத் இயந்திரம் எளிதாக எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரத்தையே சவப்பெட்டியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தற்கொலை இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து நாட்டில் ஆதரவு இருந்தாலும், இந்த இயந்திரத்திற்கு எதிர்ப்பும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற இயந்திரங்களால் சிறு பிரச்சனைகளுக்கும் உயிரை எளிதாக மாய்த்து விடலாம் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.