திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்!. அலைகடலென திரண்ட பக்தர்கள்!.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வருகின்றனர்.
வளர்பிறையில் ஒரு சஷ்டி, தேய் பிறையில் ஒரு சஷ்டி திதி என மாதந்தோறும் 2 சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசியில் வரும் கந்தசஷ்டி பெரு விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசையில் வரும் கந்த சஷ்டி பெருவிழாவில் 6 நாட்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விழா முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்து தெய்வானையை திருக்கல்யாணம் செய்வதுடன் முடிவடைகிறது. திருச்செந்தூரில் தான் முருகப்பெருமான சூரபத்மனை வதம் செய்து ஜெயந்தி நாதராக அருள் புரிகிறார்.
இதன் காரணமாக கந்த சஷ்டி பெருவிழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சென்று 6 நாட்கள் அங்கேயே தங்கி, விரதம் இருந்து சூரசம்ஹாரத்தை பார்த்து கடலில் நீராடி அடுத்த நாள் முருகனின் திருக்கல்யாணத்தை கண்டு களித்து வீடு திரும்புவர்.
அந்தவகையில் கந்தசஷ்டி விழாவின் மிக முக்கியமான நாள், ஆறாவது நாளான சஷ்டி தினம் தான். இந்த நாளில் தான் முருகப் பெருமான், சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். கந்தசஷ்டி விழாவின் உச்ச நிகழ்வான சூரசம்ஹாரம் இந்த ஆண்டு இன்று (நவம்பர் 07) வியாழக்கிழமை வருகிறது.
கந்தசஷ்டியின் ஆறாவது நாளில் முழு நேரமும் உணவு சாப்பிடாமல் உபவாசமாக இருக்க வேண்டும். முடிந்தவர்கள் உபவாசமாக இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். ஆறாம் நாளில் காலையில் ஷட்கோணம் தீபம் ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். ச,ர,வ,ண,ப,வ என்ற ஆறு எழுத்திலும் தீபம் வைத்து வழிபட வேண்டும். காலையில் நைவேத்தியம் படைக்காமல், மாலையில் மட்டுமே நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். முருகப் பெருமானின் படத்திற்கு பூக்கள் போட்டு வழிபட மனதார வழிபட வேண்டும்.
இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற காலவேளை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருளுகிறார்.
அங்கு கஜ முகம், சிங்க முகம் மற்றும் சுயரூபத்தோடு வரும் சூரபத்மனை, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வதம் செய்கிறார் ஜெயந்திநாதர். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 6 நாட்களாக ஆயிரகணக்கான பக்தர்கள் திருச்செந்தூரிலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். 10க்கும் மேற்பட்ட மாவடங்களில் இருந்து 4,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 250 சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.
Readmore: ஐயப்பப் பக்தர்களே!. இருமுடிக் கட்டில் இனிமேல் இதுலாம் கொண்டுவரக்கூடாது!. தேவசம்போர்டு அறிவிப்பு!