சண்டே ஸ்பெஷல் : ஹோட்டல் ஸ்டைலில் சுவையான இறால் தொக்கு எப்படி செய்யலாம்.!?
கடல் உணவுகளில் ஒன்றான இறால் பலருக்கும் பிடித்தமான உணவாக இருந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இறாலில் புரதச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இறாலில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். எனவே ஹோட்டல் ஸ்டைலில் சுவையான இறால் தொக்கு எப்படி செய்யலாம் என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
இறால் - 500 கிராம், நறுக்கிய வெங்காயம் - 2, புளி கரைசல் - 4 டேபிள் ஸ்பூன், தேங்காய் துண்டுகள் - 50 கிராம், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய் - 8, பச்சை மிளகாய் - 3, கடுகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், வெந்தயம் - ஒரு சிட்டிகை, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - 4 கொத்து, உப்பு - தேவையான அளவு,
செய்முறை
இறாலை உரித்து நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு புளியை ஊறவைத்து புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும். காஷ்மீரி மிளகாயை சுடு தண்ணீரில் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். கடுகு, சீரகம், வெந்தயம் நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன் காஷ்மீரி மிளகாய், தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கருவேப்பிலை, கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் அரைத்த மசாலா கலவை மற்றும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு புளி கரைசலை ஊற்ற வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறால் போட்டு மசாலா இறாலுடன் சேர்ந்து வரும்போது கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் ஹோட்டல் ஸ்டைலில் சுவையான இறால் தொக்கு தயார்.