திடீரென ஆ.ராசா உள்ளிட்ட 10 எம்பிக்கள் சஸ்பெண்ட்..!! பூகம்பத்தை கிளப்பிய விவாகரம்.!! நாடாளுமன்றத்தில் பரபரப்பு..!!
திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட 10 எம்பி-க்கள் அதிரடியாக ஒருநாளைக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திமுக எம்பி ஆ.ராசா உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வக்பு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்தாண்டு மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தது. வக்பு வாரியத்தில், முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் வகையில், மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது.
இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்ட 21 மக்களவை உறுப்பினா்களும், திமுகவை சேர்ந்த முகமது அப்துல்லா உள்பட 10 மாநிலங்களவை உறுப்பினா்களும் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டுக் குழு மசோதாவை ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், கூட்டுக்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த காரணத்தால், திமுக எம்பி ஆ. ராசா உள்பட 10 எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆ.ராசா, நாசிர் உசேன், மொஹிபுல்லா, கல்யாண் பானர்ஜி, நதிமுல் ஹக், இம்ரான் மசூத், முகமது ஜவைத், அசாதுதீன் ஓவைசி, எம். அப்துல்லா, அரவிந்த் சாவந்த், ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.