சென்னையில் இப்படியொரு அதிசயமா?… சீனாவை பின்பற்றும் மெட்ரோ!… 12 மாடி கட்டிடத்திற்குள் ரயில் நிலையம்!
சீனாவில் 19 அடுக்குமாடி குடியிருப்புகள் மெட்ரோ ரயில் சென்று வருவதை போல், சென்னையில் தற்போது 12 மாடி அடுக்குமாடி கட்டிடத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையின் பொதுப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மெட்ரோ ரயில். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான சேவையை வழங்கவும் மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் சென்னையின் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தில் மாதவரம்-சிறுசேரி பூந்தமல்லி- விவேகானந்தர் இல்லம், மாதவரம் சோளிங்கநல்லூர் என்ற மூன்று வழித்தடங்களில் சுமார் 69 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிட்டுள்ளது.
இதேபோல், இரண்டாம் கட்ட திட்டத்தில், சென்னை திருமங்கலத்தில் 12 மாடி கட்டிடம் கட்டப்பட்டு, மெட்ரோ ரயில்கள் மூன்றாவது மாடியில் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருமங்கலம் மேம்பாலம் அருகே ஒரு இடத்தை கையகப்படுத்தி இதற்கான செலவுகளை இரண்டாம் கட்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டு, சிஎம்ஆர்எல் மாநில அரசிடம் நிதி கோரவும் உள்ளது. இதற்கான கருத்தியல் வடிவமைப்பும் தற்போது வெளிவந்துள்ளது. ஸ்டேஷன்களுடன் சேர்த்து சொத்து மேம்பாடு செய்யப்படும் மற்ற இடங்கள் கோயம்பேடு மற்றும் திருமலை. இங்கு 12 மாடி கட்டிடத்தில் ஸ்டேஷன் என்ட்ரி மட்டும் எக்ஸிட் வழிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
கட்டிடங்கள், மக்கள், செயல்பாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டு வருவதற்காக மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள சொத்துக்களை மேம்படுத்தும் மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும், இதற்காக மாநில அரசிடம் நிதி கோர உள்ளதாகவும் சிஎம்ஆர்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.