தேர்வில் ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ என எழுதியதால் மாணவர்கள் தேர்ச்சி..! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம்.!!
உத்தரப் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜெய்ஸ்ரீராம், விராட் கோலி என எழுதிய மாணவர்களை ஆசிரியர் தேர்ச்சி பெற செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரில், வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பி பார்மா துறையில் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தகுதியில்லாத மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விவகாரம் குறித்து துணைவேந்தரிடம் புகார் மனுவை கொடுத்திருக்கிறார்.
ஆனால், புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. விசாரணை நடத்துவதாகவும், தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் துணைவேந்தர் கூறியிருக்கிறார். ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பி பார்மா துறையில் முதலாமாண்டில் தேர்வான சில மாணவர்களின் வினாத்தாளின் நகலை திவ்யான்ஷு சிங் கேட்டிருந்தார். இந்த நகல்கள் கிடைக்க பெற்றிருக்கின்றன.
இதில் தேர்வான பல மாணவர்கள் சரியான விடையை எழுதாதது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.இது மட்டுமல்லாமல் ஜெய்ஸ்ரீராம், விராட் கோலி, ரோஹித் என அந்த மாணவர்கள் விடைகளை எழுதியுள்ளனர். சரியாக சொல்வதெனில் ஜெய்ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், விராட் கோலி, ரோஹித் வார்த்தைகளை மட்டும் வைத்தே மாணவர்கள் விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். இந்த விடைத்தாள் நகல்களை வேறு பேராசிரியர்களிடம் கொடுத்து திருத்தச் சொன்னபோது அவர்கள், அனைத்து விடைத்தாள்களுக்கும் '0' மதிப்பெண்ணை வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பிய நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வந்தனா கூறியுள்ளார். பின்னர் தேர்வு குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில், டாக்டர் வினய் வர்மா மற்றும் டாக்டர் ஆஷிஷ் குப்தா என இரண்டு ஒப்பந்த ஆசிரியர்கள் பணம் வாங்கிக்கொண்டு மாணவர்களை பாஸ் செய்ய வைத்திருக்கிறார்கள் என தெரிய வந்திருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை வேந்தர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் தொடர்பு இருக்கிறது, எனவே அவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.