For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”பள்ளிக்கு மாறிச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது”..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

The High Court has directed the school education department not to ask transfer certificates from students transferring from one school to another.
06:26 PM Jul 19, 2024 IST | Chella
”பள்ளிக்கு மாறிச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது”     சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறிச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கொரோனா காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கோரியபோது கல்விக் கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களைப் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். எந்த ஒரு காரணத்துக்காகவும் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தர முடியாது என மறுக்கக் கூடாது. அவ்வாறு மறுக்கும் தனியார் பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ”இது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாற்றுச் சான்றிதழ் என்பது மாணவர்களின் தனிப்பட்ட ஆவணம் என்பதால் மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது 'கட்டண பாக்கி உள்ளது' என்றோ, அல்லது 'கால தாமதமாக கட்டணம் செலுத்தியதாகவோ' குறிப்பிட்டு மாணவர்களை மனரீதியாக பாதிப்படையச் செய்யக்கூடாது.

மாற்றுச் சான்றிதழ் என்பது ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை பெறுவதற்கான ஓர் ஆவணமேயன்றி, அது பெற்றோர்களிடமிருந்து கட்டண பாக்கியை வசூலிக்கும் கருவி அல்ல. கல்வி உரிமைச் சட்டப்படி மாற்றுச் சான்றிதழ் கட்டாயமல்ல என்பதால், இது சம்பந்தமான விதிகளில் தமிழக அரசு 3 மாதங்களில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். மேலும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேர்க்கை பெறும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி நிர்பந்திக்கக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

மாற்றுச் சான்றிதழ்களில் கட்டண பாக்கி குறித்து குறிப்பிடும் தனியார் பள்ளிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. அந்த கட்டண பாக்கியை வசூலிக்க தனியார் பள்ளிகள் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக மாற்றுச் சான்றிதழை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் எந்த மனக்குறையும் இல்லாமல் கல்வி கற்க அனுமதிக்க வேண்டிய பள்ளிகள் கட்டண பாக்கிக்காக அவர்களை வகுப்புக்கு வெளியே நிற்கச் செய்வது, பலர் முன்னிலையில் எழுந்து நிற்க வைத்து மாணவர்களை மன ரீதியாக பாதிப்புக்குள்ளாக்குவது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : இந்த பொருளின் விலை ஏன் இப்படி இருக்கு..? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா..?

Tags :
Advertisement