Stalin | ’தோல்வி பயம் பிரதமரின் முகத்தில் தெரிகிறது’..!! மோடியை கடுமையாக விளாசிய முதல்வர் ஸ்டாலின்..!!
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என்று பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுகவை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசியிருக்கிறார் பிரதமர். திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. மோடி பாணியில் பாஜகவே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். நல்ல ஆளுங்கட்சியாக இருக்க தெரியாத பாஜக, வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாக இருக்கட்டும் என வாழ்த்துகிறேன். ஒரு மாநிலத்துக்கு தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்குவதையும் மத்திய அரசு தடுக்கிறது.
பாஜக அரசின் வஞ்சக செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடையே திமுகவினர் பரப்ப வேண்டும். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாக தொடங்கி விட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் இந்திய கூட்டணி கட்சிகளுக்கு பாஜக தொல்லை கொடுத்து வருகிறது. பாஜக அளிக்கும் தொல்லைகளைப் பார்க்கும்போது இந்திய கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாக தெரிகிறது. இந்தியா கூட்டணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. திமுகவைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார் பிரதமர். அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார்? எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்" என்று அவர் விளாசியுள்ளார்.
English Summary : Chief Minister MK Stalin blasted PM Modi