மக்களே...! ஆன்லைன் மூலம் தீபாவளி பண்டிகைக்கு அரசு பேருந்து முன்பதிவு...!
தீபாவளி, பண்டிகை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள்.
இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கூறியதாவது; ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் அக்டோபர் 31-ம்தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய 2 நாட்கள் பயணத்துக்கு பேருந்துகளின் இருக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அக்டோபர் 29-ம் தேதி தமிழகம் முழுவதும் 9,500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து பயணிக்க 7,200-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
அக்டோபர் 30-ம் தேதி பயணத்துக்கு மாநிலம் முழுவதும் 7,900-க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து மட்டும் 5,900-க்கும் மேற்பட்ட இருக்கைகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது. அந்த வகையில் 130-க்கும்மேற்பட்ட பேருந்துகளின் இருக்கைகளுக்கான முன்பதிவு முற்றிலுமாக நிறைவடைந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, சிறப்பு பேருந்துதொடர்பான அறிவிப்பு வெளியாகும். அரசு போக்குவரத்துக் கழக www.tnstc.in இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.