பஸ் ஸ்டிரைக்கால் ஸ்தம்பிக்கும் தென் மாவட்டங்கள்..!! எங்கும் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு..!!
தமிழ்நாடு அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, திங்கட்கிழமை இரவு 8 மணியில் இருந்தே தமிழகம் முழுவதும் பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டது. 9 மணி முதல் மிக மிகக் குறைவாகவே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் ஸ்தமிபித்து போயினர்.
மதுரை, நெல்லை, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயங்குகின்றன. மேலும், முன்பே புறப்பட்ட பேருந்துகள் கூட பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலானோர் வீடு திரும்ப முடியாமலும், செல்ல வேண்டிய இடத்துக்கு போக முடியாமலும், சொந்த ஊர் போக முடியாமலும் மக்கள் திண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இந்த ஸ்டிரைக்கை அறிவித்திருப்பது மக்களை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.