மழைக்காலம் வந்தாலே, படுக்கும் பாயில் பூஞ்சை, ஈரமான டோர் மேட், கரண்ட் கட் பற்றி கடுப்பா.? டென்ஷனை தவிர்க்க சில டிப்ஸ்.!
தற்போது தமிழகமெங்கும் புயல் காரணமாக கனமழை வீசி வருகிறது. இதனால் பல்வேறு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் மக்களுக்கு பல்வேறு விதமான தொந்தரவுகள் ஏற்படும். அது போன்ற பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது மற்றும் மழைக்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக மழைக்காலங்களில் வீடுகளில் பயன்படுத்தும் பாய்களில் பூஞ்சை பிடிக்கும். மழைத் தண்ணீர் பாய்களில் பட்டு காயாமல் இருக்கும் போது அவற்றில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு பூசனம் பிடிக்கும். மழைக்காலம் என்பதால் இவற்றை வெளியில் காய வைக்கவும் முடியாது. பாய்களுக்கு இதுபோன்று பூஞ்சை தொற்று வராமல் இருக்க பாய்களின் உள்புறம் செய்தித்தாள்களை வைத்து சுருட்டி வைப்பதன் மூலம் பூசனம் பிடிக்காமல் பாதுகாக்கலாம்.
நாம் வீடுகளில் பொதுவாக ஃப்ளோர் மேட் பயன்படுத்துவோம். இதன் மூலம் வெளியில் இருந்து வரும் அழுக்குகள் மற்றும் தூசிகள் வீட்டிற்குள் வராமல் தடுக்கலாம். ஆனால் மழைக்காலத்தில் இவற்றை பயன்படுத்தும் போது கால்களில் உள்ள ஈரம் இந்த மேட்டுகளில் படிந்து விடும். இதனால் காய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். இதை தவிர்ப்பதற்காக கனமான மேட்டுகளுக்கு பதில் நம் வீட்டில் இருக்கும் பழைய காட்டன் நைட்டிகளை கிழித்து அவற்றை ஃப்ளோர் மேட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை உலர வைப்பதும் எளிதாக இருக்கும். வெயில் இல்லாமல் கூட காட்டன் துணிகள் விரைவிலேயே காய்ந்து விடும்.
மழைக்காலத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று பவர் கட். இடி மின்னல் காரணமாக அடிக்கடி பவர் கட் ஏற்படும். இதனை சமாளிக்க வீடுகளில் எப்போதும் மெழுகுவர்த்தி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் வாங்கிய மெழுகுவர்த்திகளை ஃப்ரீசரில் வைத்து பயன்படுத்துங்கள். இதன் மூலம் மெழுகுவர்த்தி நீண்ட நேரம் நின்று எரியும். வீட்டில் மெழுகுவர்த்தியை வைக்கும் போது ஒரு கிண்ணத்தில் வைத்து அதனை சுற்றி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வைத்தால் மெழுகுவர்த்தி கரைவதற்கு தாமதமாகும்.