22 தீர்த்தங்கள் நிறைந்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்.. மெய் சிலிர்க்க வைக்கும் சுவாரஸ்ய வரலாறு இதோ..
இந்துக்களின் புனித தலங்களில் மிக முக்கியமான தலமாக இருக்கிறது ராமேஸ்வரம். ராமாயணப்படி ராமன் இலங்கைக்கு சென்று ராவணனை கொன்று விட்டு சீதையை மீட்டு வந்ததை நாம் அறிவோம். ராவணனை கொன்ற பாவத்தை (பிரம்மஹத்தி தோஷம்) போக்கி கொள்ள சிவலிங்கத்தை நிறுவி ராமர் வழிபட்ட இடத்தை தான் தற்போது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்க தலங்களில் தமிழகத்தை சேர்ந்த ஒரே தலம் ராமநாத சுவாமி கோயிலாகும். இந்திய தீபகற்பத்தின் முனையில் அமைந்துள்ள இந்த நகரம் மன்னார் வளைகுடாவில் இலங்கைக்கு அருகே அமைந்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கோவில் அமைப்பு : இந்த ஆலயத்தில் பிரகாரம் 1212 தூண்களைக் கொண்டது இதன் மற்றொரு சிறப்பாகும். தரையில் இருந்து மேற்கூரை வரையிலான இதன் உயரம் சுமார் 30 அடியாகும். இதன் இராஜகோபுரம் 53மீ உயரம் கொண்டது. ஒவ்வொரு தூணும் ஒரு தனிப்பட்ட தொகுப்பை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் ராமநாதசுவாமி கர்ப்ப கிரகத்தில் காணப்படுவார். இது தவிர விசாலாக்ஷி, பர்வதவர்தினி, சந்தான கணபதி, மகாகணபதி, சுப்பிரமணியர், சேதுமாதவர், மகாலட்சுமி, நடராஜர், ஆஞ்சநேயர் போன்றவர்களுக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராமநாதஸ்வாமி கோயில் தீர்த்தம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு குளம் மற்றும் கின்று வடிவில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இந்த 22 தீர்த்தங்களும் ஸ்ரீ ராமரின் அம்புறாத்துளியில் இருந்த 22 அம்புகளைக் குறிப்பதாகும். இந்த ஆலயத்தின் கருவறைக்கு செல்வதற்கு முன்னர் ஒவ்வொரு பக்தரும் இந்த தீர்த்தங்களில் நீராடிவிட்டு செல்ல வேண்டும். ராமநாதசுவாமி ஆலயத்தின் வெளிப்புறப் பிரகாரம், உலகின் நீளமான பிரகாரம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது.
கோவில் வரலாறு : இந்த ஆலயத்தில் இரண்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒன்று ராமலிங்கம் மற்றொன்று விஸ்வலிங்கம். முதன்மைக் கடவுளாக அமைந்துள்ள ராமநாதசுவாமி லிங்கம், ஸ்ரீ ராமரால் நிறுவப்பட்டது என்றும் அதற்கு சீதா தேவியும் ஹனுமனும் உதவியதாகவும் கூறப்படுகிறது. ராவணன் ஒரு பிராமண குலத்தைச் சேர்ந்தவன் மற்றும் அவன் ஒரு தீவிர சிவபக்தன் ஆவான். அவனை போரில் ஸ்ரீ ராமர் கொன்றதால் அந்த பாவத்தைப் போக்க இந்த கோயிலை அவர் எழுப்பியதாக வரலாறு குறிப்பிடுகிறது. சீதா தேவி, மண் கொண்டு தன்னுடைய கைகளால் செய்த லிங்கம் “ராமலிங்கம்” என்றும், “விஸ்வலிங்கம்” என்பது சிவபெருமானின் வாசஸ்தலங்களில் ஒன்றான கைலாசத்தில் இருந்து ஹனுமான் கொண்டு வந்தது என்றும் அறியப்படுகிறது.
ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட வேண்டி, ஒரு பெரிய லிங்கத்தை நிறுவி, சிவபெருமானை வழிபட வேண்டும் என்று ஸ்ரீ ராமர் எண்ணினார். இதன் காரணமாக ஹனுமனை அழைத்து இமாலய மலையில் இருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வருமாறு பணித்தார். ஆனால், ஹனுமான் லிங்கத்தை எடுத்து வருவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பூஜை நடக்க வேண்டும் என்பதால் அந்த சூழலை சரி செய்யும் நோக்கத்தில், சீதா தேவி, அந்த கடற்கரையில் இருக்கும் மணலை கொண்டு ஒரு சிறு லிங்கத்தை தோற்றுவித்தார். அதனால் சீதா தேவியால் செய்யப்பட்ட இந்த லிங்கம் மற்றும் அதன் பின்னர் ஹனுமனால் கொண்டு வரப்பட்ட லிங்கம் ஆகிய இரண்டையும் பிரதிஷ்டை செய்து ஸ்ரீ ராமர் ஒரு ஆலயத்தை நிறுவினார்.