இண்டிகோ உணவில் இவ்வளவு உப்பா? - ஆய்வு சொல்வது என்ன?
இண்டிகோ விமானங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் உப்பின் அளவை மேகியுடன் ஒப்பிடும் வீடியோவை ரேவந்த் ஹிமத்சிங்க என்ற உணவுப் பொருட்கள் ஆய்வாளர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
பிரபல உணவு பொருள் ஆய்வாளர் ரேவந்த் ஹிமத்சிங்க என்பவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை ருசித்து அந்த உணவுப் பொருட்களை மதிப்பாய்வு செய்வதில் சிறப்பு பெயர் பெற்றவர். அந்த வகையில், அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் Cadbury’s Bournvita இல் உள்ள சர்க்கரை உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்தார். மதிப்பாய்வு செய்த பிறகு அந்த நிறுவனத்திடம் Cadbury’s Bournvitaவில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அனைவராலும் பாராட்டப்பட்டார்.
அவர் தற்போது, இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவை மதிப்பாய்வு செய்துள்ளார். உப்புமா, அவல் போகா உள்ளிட்ட உணவுகளை மதிப்பாய்வு செய்தார். இண்டிகோ விமானத்தில் வழங்கப்படும் உணவுகளின் அதிக அளவு உப்பு சேர்க்கப்படுகிறது என்று ஹிமத்சிங்க கூறினார். இது தொடர்பாக, தனது “X” இல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் கூறியதாவது, "மேகி அதிக சோடியம் நிறைந்த உணவு என்பது நம்மில் பலருக்கு தெரியும். இண்டிகோவில் வழங்கப்படும் உப்புமாவில் மேகியை விட 50% உப்பு அதிகமாக உள்ளது. இண்டிகோவில் வழங்கப்படும் அவல் போகாவில் மேகியை விட 83% உப்பு அதிகமாக உள்ளது. அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்னைகள் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் ஏற்படலாம்” எனத் தெரிவித்தார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது.